இனியவை நாற்பது
அறிமுகம்
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' என முடியும் பெயர் கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத்துதித் திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும்கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண்பாவினால்ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள்நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.
விரிதரவு
தரவகம் என்பது மின்னுரைகள் அல்லது மின்நூல்களின் தொகுப்பு எனலாம். "ஒழுங்குமுறையுடன் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு கணினியில் சேமிக்கப்பட்ட இயற்கையான நடைகளை உடைய உரைகள்"
இந்த இணையதளத்தில் ‘இனியவை நாற்பது’ நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு அறிமுகம், சொற்தரவு, இலக்கணத் தரவு, பாடல், குறியீட்டுத்தரவகம், அகராதி, இலக்கணக்குறியீடு, பாடல் விளக்கம், இலக்கண உரை, இணைய அகராதி ஆகியவை இடம்பெற்றள்ளது. இயற்கை மொழி ஆய்வில் இனியவை நாற்பதை அராய்வதற்கு முழுமையான தரவகம் இதில் அளிக்கப்பட்டுள்ளது.